Friday, 31 January 2014

பாரதத்தில் கிளைத்த கதைகள் -2

வியாச முனிவர் பீஷ்மரின் குலமூதாதையொருவனின், மிக முக்கியமானவனான சிபி சக்கிரவர்த்தியின் கதையை விளக்கும் பகுதி ..  தன் நிழலில் பாதுகாப்பு வேண்டி நிற்கும் எவ்வுயிரையும் ரட்சித்து காப்பதன் அறத்தையும்  ஷத்ரியனுக்கு உரிய  நெறியையும் சொல்கிறார். 
....
சந்திரவம்சத்து சிபி தன் அரண்மனை உப்பரிகையில் அமர்ந்திருக்கையில் வெண்பஞ்சுச் சுருள் போன்ற சின்னஞ்சிறு வெண்புறா ஒன்று சிறகடித்து வந்து அவன் ஆடைக்குள் புகுந்துகொண்டது. அவன் எழுந்து அதை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டான். இதயம் நடுங்க, சிறகுகள் பிரிந்து உலைய அவன் கைவெம்மையில் ஒடுங்கியிருந்தது. அதன் முதுகிலிருந்த ரத்தக்காயத்தில் இருந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. அப்போது சாமரம்போன்ற சிறகுகள் வீசி ஒலிக்க எரித்துளிகள் போன்ற கண்களும், போரில் பின்னிக்கொண்ட குத்துவாட்களைப் போன்ற அலகுகளும், ஆற்றுக்கரை மரத்தின் வேர்ப்பிடிப்பு போன்ற கால்களும் கொண்ட செம்பருந்து ஒன்று வந்து அவன் உப்பரிகை விளிம்பிலமர்ந்தது.
சிபியிடம் அப்பருந்து சொன்னது “மன்னனே உன்னை வணங்குகிறேன். சைத்ரகம் என்னும் செம்பருந்துக்குலத்தின் அரசனாகிய என்பெயர் சித்ரகன். பிறப்பால் நானும் உன்னைப்போன்றே ஷத்ரியன். இந்தப் புறாவை நான் விண்ணில் பார்த்தேன். எனக்கும், நேற்றுமாலை முட்டை விட்டிறங்கிய என் குஞ்சுகளுக்கும் சிறந்த உணவாகும் இது என்று இதைத் தொடர்ந்து சென்று தாக்கினேன். காயத்துடன் அவள் உன்னருகே வந்திருக்கிறாள். அவளை என்னிடம் விட்டுவிடு. மண்ணில் உள்ள மானுடர்களுக்குத்தான் நீ அரசன். விண்ணிலும் நீரிலும் கோடானுகோடி உயிரினங்கள் வேட்டையாடியும் வேட்டையாடப்பட்டும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவ்வாழ்க்கைக்குள் நுழைய உனக்கு அனுமதியில்லை”
“ஆம், நானறிவேன். என் காலடிக்கீழ் ஒவ்வொருகணமும் பல்லாயிரம் சிற்றுயிர்கள் அழிவதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த வெண்புறா என்னிடம் அடைக்கலம் தேடியிருக்கிறது. இதைக் காப்பது ஷத்ரியனாகிய என் கடமை. அக்கடமையிலிருந்து நான் வழுவமுடியாது” என்றான் சிபி.
சித்ரகன் சினந்து சிறகடித்தெழுந்தது “மூடனைப்போல பேசுகிறாய். தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்” என்றது.
“என்னுடைய அரண்மனை வளாகத்திற்குள் என் கைகளுக்குள் வந்த ஒவ்வொன்றுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பதே என் தன்னறம்” என்றான் சிபி. அலகைவிரித்து சீறிச் சிறகடித்த சித்ரகன் “அப்படியென்றால் நானும் என்குழந்தைகளும் பசித்துச் சாகவேண்டுமென நினைக்கிறாயா? உன் நீதியின் துலாக்கோலில் எனக்கு இடமே இல்லையா?” என்றது.
சிபி ஆழ்ந்த மனக்குழப்பத்துக்குள்ளானான். “உனக்கும் உன் குலத்துக்குமான உணவை நான் அளிக்கலாமா?” என்றான். “அறியாதவனாகப் பேசுகிறாய். நான் ஷத்ரியன். பட்டினியால் இறக்கும்போதும் கொடைபெற்று வாழமாட்டேன். நான் என் வீரத்தால் ஈட்டாத எதுவும் எனக்கு உணவல்ல” என்றது சித்ரகன்.
“மன்னனே உண்ணப்படாத ஏதும் இப்பிரபஞ்சத்திலில்லை என்பதை நீ கற்றறிந்த நூல்கள் உனக்குச் சொல்லவில்லையா என்ன? என்னை இந்த அலகுடனும் இந்த நகங்களுடனும் இப்பெரும்பசியுடனும் படைத்த ஆற்றல் அல்லவா என்னை கொன்று உண்பவனாக ஆக்கியது? இந்தச் சின்னஞ்சிறு வெண்புறா இன்று காலையில் மட்டும் ஆயிரம் சிறுபூச்சிகளை கொத்தி உண்டிருக்கிறதென்பதை நீ அறிவாயா? அந்த ஆயிரம் புழுக்கள் பல்லாயிரம் சகப்புழுக்களை விழுங்கி நெளிந்துகொண்டிருந்தன என்பதை அறிவாயா? இதை விட்டுவிடு. இதைக் காப்பாற்ற முயலும்போது நீ இப்பிரபஞ்சத்தை நிகழ்த்தும் முதல்மனதுடன் போட்டிபோடுகிறாய்” என்று சித்ரகன் சொன்னது.
“உண்மை….ஆனால் படைப்புடன் போட்டியிடுவதனாலேயே மன்னனை தெய்வம் என்கின்றன வேதங்கள். ஆகவேதான் காப்பதற்கும் அழிப்பதற்கும் மன்னிப்பதற்கும் அவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது” என்றான் சிபி. சித்ரகன் சலிப்புடன் “நம்மிடையே விவாதம் எதற்கு? நீ என் பசிக்கு மட்டும் பதில்சொல்” என்றது.
தானறிந்த அனைத்து நெறிநூல்களையும் நினைவில் ஓட்டிய சிபி அதற்கான வழியைக் கண்டுகொண்டான். ஷத்ரியன் எதையும் தன் குருதியால்தான் ஈடுகட்டவேண்டும் என்றன நூல்கள். அவனுடைய ஆயுதம் அவனுடைய உடலே. அவனுடைய தர்மம் தியாகம்.
“இப்புறாவை நான் காத்தாகவேண்டும். ஆனால் உன் பசியைப்போக்குவதும் எனக்கு விதிக்கப்பட்ட அறமேயாகும்” என்றான் சிபி. “தர்மநூல்களின்படி நான் எந்தச்சிக்கலையும் என் மாமிசத்தாலும் குருதியாலும்தான் தீர்க்கவேண்டும். இதற்குப் பதிலாக நீ என்னைப்பெற்றுக்கொள்வது ஷத்ரிய முறையே. இதோ இப்புறாவின் அளவுக்கே என் தொடைச்சதையை அறுத்து உன் முன்வைக்கிறேன்” என்றபடி தன் உடைவாளை உருவி தொடைச்சதையை வெட்டி அப்புறா அமர்ந்திருந்த ஊஞ்சல்தட்டின் மறுநுனியில் வைத்தான். ஆனால் புறாவின் எடை தாழ்ந்தே இருந்தது. மேலும் சதையைவெட்டி அங்கே வைத்தபோதும் புறாவின் எடைக்கு நிகராகவில்லை
புறா தன் சிறுமணிக் கண்களைச் சுழற்றி “மன்னனே, மலையஜம் என்னும் பாறையிடுக்கில் வாழும் புறாக்குலத்தைச் சேர்ந்த என் பெயர் பிரபை. அன்னையரை அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துத்தான் மதிப்பிடவேண்டும். இன்னும் நூறாண்டுக்காலம் என் முட்டைகளிலிருந்து விரிந்து வரப்போகும் அத்தனை புறாக்களின் எடையும் என்னில் உள்ளது” என்றது. சிபி சித்ரகனை நோக்கி “அப்படியென்றால் நான் என்னை முழுமையாகவே உனக்கு அளிக்கிறேன்” என்று சொல்லி குருதிபடிந்த நகங்கள் கொண்ட அதன் பாதங்கள் முன் தன் தலையை காணிக்கையாக வைத்தான்.
சித்ரகன் சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் “மன்னனே நீ என் காலடியில் தலைகுனிந்ததனாலேயே என்னிடம் அடைக்கலம் கோரியவனாகிறாய். உன்னை உண்பதை விட நானும் என்குலமும் பட்டினியில் மடிவதே அறமாகும்” என்று சொல்லி பறந்துசென்றது.
“சிபி ‘நீயும் உன் குலங்களும் வாழ்வதாக’ என்று சொல்லி வாழ்த்தி அந்த வெண்புறாவை வானில் விட்டான். அவன் என்ன செய்யப்போகிறான் என்று வானில் வந்தமர்ந்து நோக்கிய அவன் முன்னோர்கள் ஆரவாரம்செய்தனர்” என்று சொல்லி முடித்த வியாசர் பீஷ்மரிடம் “ஷத்ரியனான சித்ரகன் சொன்னதை நினைவுகொள்க. உன் முன் தலைவணங்கும் ஒவ்வொருவரும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களே… மன்னனிடம் குடிகள் தலைபணிவது அதன்பொருட்டே” என்றார்.
-வெண் முரசில் இருந்து 

பாரதத்தில் கிளைத்த கதைகள் - 1


வியாசர் தானும் ஒரு பாத்திரமாகிறார் மகாபாரதத்தில்.கங்கை வழி வந்தவர்  பீஷ்மரின் எனில், கங்கையின் தமக்கை யமுனையின் வழி வந்த மைந்தனாக வியாச முனிவர். வெண் முரசில் வியாசரின் கதை
......
ஆதிவசிட்டரின் நூறாவது மைந்தனின் பெயர் சக்தி. அவனை முனிகுமாரியாகிய அதிர்ஸ்யந்தி மணம் புரிந்துகொண்டாள். கிங்கரன் என்ற அரக்கன் சக்தியைத்தவிர மீதி அத்தனை வசிட்டகுமாரர்களையும் பிடித்து உண்டுவிட்டான். துயரத்தால் நீலம்பாரித்து கருமையடைந்த வசிட்டர் ஆயிரத்தெட்டு தீர்த்தங்களில் நீராடினார். புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார். இச்சைப்படி உயிர்துறக்கும் வரம்கொண்டவராதலால் தர்ப்பைப்புல்லைப் பரப்பி அமர்ந்து கண்மூடி தியானித்து தன் உடலில் இருந்து ஏழுவகை இருப்புகளை ஒவ்வொன்றாக விலக்கலானார்.
அதன் முதல்படியாக அவர் தன் நாவை அடைந்த நாள் முதல் கற்கத் தொடங்கிய வேதங்களை ஒவ்வொரு மந்திரமாக மறக்கத்தொடங்கினார். அப்போது அவரது தவக்குடிலில் அவருக்குப் பணிவிடை செய்பவளாக அதிர்ஸ்யந்தி இருந்தாள். தான் மறந்த வேதமந்திரங்கள் வெளியே ஒலிப்பதைக் கேட்டு வசிட்டர் கண்விழித்து அதிர்ஸ்யந்தியிடம் வியப்புடன் “வேதத்தை நீ எப்படி கற்றாய்?” என்று கேட்டார். “நான் பாடவில்லை, என் நிறைவயிற்றுக்குள் வாழும் குழந்தை அதை பாடுகிறது” என்றாள் அதிர்ஸ்யந்தி.
பெருகிய வியப்புடன் எழுந்து அவள் வயிற்றருகே குனிந்து அக்குழந்தையைப் பார்த்தார் வசிட்டர். தன்னிலிருந்து விலகும் மெய்ஞானமெல்லாம் அதைச் சென்றடைவதைக் கண்டார். நூறு மைந்தர்களின் ஆயிரம் பேரர்கள் அடையவேண்டியவை அனைத்தும் அந்த ஒரே குழந்தைக்குச் செல்வதை உணர்ந்தார். “நீ புகழுடன் இருப்பாயாக” என அதை ஆசீர்வதித்தார்.

உடனே நிமித்திகரை வரவழைத்து அக்குழந்தையின் வாழ்க்கையை கணிக்கச் சொன்னார். “விதிப்படி இக்குழந்தையும் கிங்கரனால் உண்ணப்படும். அவன் இதை இந்த வனமெங்கும் தேடி அலைந்துகொண்டிருக்கிறான்” என்றார் நிமித்திகர். “எங்கு எப்படி தப்பிச்சென்றாலும் குழந்தையை கிங்கரன் கண்டுபிடிப்பதை தடுக்கவியலாது” என்றார்.
கடும் துயருடன் தவக்குடில் வாசலில் கையில் தர்ப்பையுடன் காவலிருந்தார். கிங்கரன் வருவானென்றால் தன்னுடைய அனைத்துத் தவவலிமையாலும் தன் மூதாதையரின் தவவலிமைகளாலும் அவனை சபிக்கவேண்டுமென நினைத்தார். அக்குழந்தை ஞானவானாக மண்ணுலகில் வாழ்வதற்காக தானும் தன் ஏழுதலைமுறை மூதாதையரும் நரகத்தில் உழல்வதே முறை என்று எண்ணினார்.
பகலில் இருளிறங்கியதுபோல எட்டுகைகளிலும் ஆயுதங்களுடன், மானுடநிணமும் குருதியும் கொட்டும் வாயுடன், மண்டையோட்டு மாலையசைய, கிங்கரன் தவக்குடிலின் முற்றத்தை வந்தடைந்தான். கையில் தர்ப்பையுடன் அக்குழந்தை வாழ்ந்த கருவறைக்கும் அவனுக்கும் நடுவே நின்றார் வசிட்டர். கிங்கரன் அருகே நெருங்கியதும் தர்ப்பையை தலைமேல்தூக்கி தன்னையறியாமல் “கிங்கரனே, இதோ நீ செய்த அனைத்துப் பாவங்களையும் நான் மன்னிக்கிறேன். விடுதலை அடைவாயாக!” என்று சொன்னார்.
விரிந்த செவ்விழிகளில் இருந்து கண்ணீர் வழிய கிங்கரன் அவர் முன் மண்டியிட்டான். அவன் உடல் வலப்பக்கமாகச் சரிந்து விழ இடப்பக்கமாக ஒரு கந்தர்வன் மேலெழுந்துவந்தான். “ஐயனே, என் தீவினைதீர்த்து என்னை என் மேலுலகுக்கு அனுப்பினீர்கள். உங்கள் மருமகளின் வயிற்றில் வாழும் அக்குழந்தை ஞானத்தை முழுதுணர்ந்தவனாவான்” என்றபின் வானத்திலேறி மறைந்தான்.

அன்னையின் கருவிலிருக்கையிலேயே நால்வேதமும் அறுவகை தரிசனங்களும் ஆறுமதங்களும் மும்மைத் தத்துவங்களும் கற்று மண்ணுக்குப்பிறந்து வந்தவர் பராசரமுனிவர். கைலாயமலைச்சரிவில் பீதவனத்தில் தங்கி தவமியற்றிய பராசரர் புலஸ்திய மாமுனிவரின் ஆசியின்படி பாரதவர்ஷத்தின் அனைத்துப் புராணங்களையும் ஒருங்கிணைத்து ஒற்றைப்பெருநூலாக யாக்கத் தொடங்கினார். புராணசம்ஹிதையை இயற்றிமுடிந்ததும் புலஸ்தியர் முதலான நூறு முனிவர்களை அழைத்து பீதவனத்திலிருந்த சுருதமானசம் என்னும் தடாகத்தின் கரையில் நின்ற வனவேங்கை மரத்தடியில் ஒரு சபைகூட்டி அந்நூலை வாசித்துக்காட்டினார். அனைவரும் அது மண்ணுலகில் எழுந்த மாபெரும் மெய்ஞானநூல் என்று அவரைப்புகழ்ந்தனர். மனம் உவகையில் பொங்கி நுரைக்க அன்றிரவு துயின்றார்.

மறுநாள் அதிகாலையில் காலைவழிபாடுகளுக்காக தடாகத்துக்கு அவர் சென்றபோது அந்த வனவேங்கை மரத்தடியில் ஒரு இடையச்சிறுவன் வந்தமர்ந்து குழலிசைக்கக் கேட்டார். அந்த இசையில் மயங்கி அருகே நெருங்கிச்சென்றபோது அவ்விசை மலரும்தோறும் வனவேங்கையின் கிளைகளிலெல்லாம் பொன்னிற மலர்கள் பூத்து நிறைவதைக் கண்டார். அவன் வாசித்துமுடித்தபோது மலர்க்கனத்தால் மரக்கிளைகள் தாழ்ந்து தொங்கி தூங்கும் மதயானைகளின் மத்தகங்கள்போல மெல்ல ஆடின. அவன் சென்றபின் அந்தக் குழலிசையை மெல்ல திரும்ப மீட்டியபடி வேங்கை மலருதிர்க்கத் தொடங்கியது.
கண்ணீருடன் தன் தவச்சாலையை அடைந்து தன்னுடைய நூலை எடுத்துப்பார்த்தார் பராசரர். அதை அங்கேயே நெருப்பிடவேண்டுமென்று எண்ணி அனல் வளர்த்தார். அவர் சுவடிகளைப்பிரிக்கும்போது அங்கே நாரதமுனிவர் வந்தார். அவர் செய்யப்போவதென்ன என்று உணர்ந்தார் நாரதர். “பராசரா, உன்னிலிருப்பது ஞானம். அது மரங்களை மடித்து உண்டு காடதிர காலெடுத்து நடந்துசெல்லும் மதகரி.. கவிதையோ இசையென்னும் சிறகு முளைத்த பறவை. அது விண்ணில் நீந்தும், மலர்களில் தேனுண்ணும்.. மதகரியைப் படைத்த நியதியே பறவையையும் படைத்தது என்று உணர்க” என்றார். தன் வல்லமையையும் எல்லையையும் உணர்ந்த பராசரர் அதன்பின் மலைச்சிகர நுனியில் நின்று வான் நோக்கி துதிக்கை தூக்கும் யானையையே தன்னுள் எப்போதும் உணர்ந்தார்.
யமுனையின் கரையில் வந்து நின்ற பராசரர் மறுகரைக்குச் செல்ல படகு வேண்டுமென்று கோரினார். நிலவெழுந்துவிட்டதனால் படகைக் கொண்டுவர தங்கள் குலநியதி அனுமதிப்பதில்லை என்று சத்யவான் சொல்லிவிட்டான். களைப்புடன் யமுனைக்கரையில் நின்றிருந்த மரமொன்றின் அடியில் இரவுறங்க வந்த பராசரர் நிலவில் தெய்வசர்ப்பம்போல ஒளி கொண்டெழும் யமுனையையே பார்த்துக்கொண்டிருந்தார். தானறிந்த ஞானமனைத்தும் அக்காட்சியின் முன் சுருங்கி மறைந்து வெறுமையாவதை உணர்ந்தபோது அவர் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டத் தொடங்கியது.
அப்போது யமுனைக்கரையோரமாக பதினைந்து வயதுப்பெண்ணொருத்தி காற்றில் அலைபாயும் புகைச்சுருள் போல கைகளை வீசிக் குதித்து நடனமிட்டபடி வருவதை பராசரர் கண்டார். எழுந்து அவளருகே நெருங்கியபோதும் அவள் அவரைப் பார்த்ததாகத் தெரியவில்லை. “பெண்ணே நீ யார்?” என அவர் அவளிடம் கேட்டார். அவள் பதில் சொல்லாமல் யமுனையை சுட்டிக்காட்டிச் சிரித்தாள். “உன் பெயரென்ன? நீ இந்த மச்சகுலத்தவளா?” என்றார் பராசரர். அவளிடம் சிரிப்பன்றி மொழியேதுமிருக்கவில்லை. அவள் பித்துப்பிடித்தவள் என்பதை அவர் உணர்ந்தார். யமுனையை அன்றி எதையும் அவள் உணரவில்லை என்று தெரிந்தது. அவள் கரையோரப்படகு ஒன்றை எடுத்தபோது “பெண்ணே உன்னைப்பார்த்தால் செம்படவப்பெண் போலிருக்கிறாய். என்னை மறுகரை சேர்க்கமுடியுமா?” என்று கேட்டார்.
அவளுடன் படகில் செல்லும்போதுதான் அவர் தன் சித்தத்தை மயக்கி பித்தெழச்செய்வது எது என்று உணர்ந்தார். அது அவள் உடலில் இருந்து எழுந்த பிறிதொன்றிலாத மணம். காட்டில் எந்த மலரிலும் அதை அவர் உணர்ந்ததில்லை. பிறந்த குழந்தையிடமிருக்கும் கருவறை வாசனை போன்றது. அல்லது முலைப்பாலின் வாசனை. அல்லது புதுமீனின் வாசனை. யமுனையின் மையத்தை அடைந்தபோது அது நீராழத்தின் வாசனை என்று அவர் அறிந்தார். அவருடைய உள்ளும் புறமும் அவளன்றி வேறேதுமில்லாமலாக்கியது அவ்வாசனை.
நிலவில் ஒளிவிட்ட நீலநீர்வெளியை நோக்கிய மலர்ந்த விழிகளுடன் அமர்ந்திருந்த அவளிடமிருந்து நீலவண்டின் ரீங்காரம்போல ஒரு பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. மிகமெல்லிய ஓசை காதில் கேட்கிறதா கனவுவழியாக வருகிறதா என்றே ஐயமெழுந்தது. ஆனால் சிறிதுநேரத்தில் அவர் யமுனையின் கரும்பளிங்கு நீர்ப்பரப்பெங்கும் லட்சக்கணக்கான மீன்விழிகள் சூழ்ந்து இசைகேட்டு பிரமித்து நிற்பதைக் கண்டார். அந்த மீன்கள் நீருக்குள் இசைத்துக்கொண்டிருக்கும் பாடலே அவளிலும் ஒலிக்கிறது என்று உணர்ந்து கொண்டார். அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.
பித்தியாக இருந்த மச்சகந்தியை பராசரர் தன் கையின் கங்கணத்தை அவள் கையில் கட்டி படகிலேயே மணம் புரிந்துகொண்டார். அவர்களைச்சூழ்ந்த விடிகாலைப்பனி அறையாக அமைய அவளுடன் கூடினார். மறுகரைக்குச் சென்றதும் அவளை ஆசீர்வதித்துவிட்டு காட்டுக்குள் நடந்தபோது முளைத்து தளிர்விட்ட விதையின் வெறுமையையும் நிறைவையும் அவர் உணர்ந்தார். மச்சகந்தி பின்பு வீடு திரும்பவில்லை. அவளைத்தேடியலைந்த அவள்குலம் அவள் மறைந்துவிட்டாள் என எண்ணியது. அவள் யமுனையின் வெகுதூரத்தில் கரையோரத்து மரங்களின் கனிகளையும் நத்தைகளையும் நண்டுகளையும் உண்டு இரவும் பகலும் அந்தப் படகிலேயே வாழ்ந்தாள்.
மச்சகந்தி கருவுற்று உதரம் நிறைந்தபின் யமுனைக்குள் இருந்த மணல்தீவொன்றுக்குள் நாணலில் சிறுகுடிலைக் கட்டி அதில் தங்கிக்கொண்டாள். சித்திரை மாத முழுநிலவுநாளில் அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளைப்போலவே கருநிறமும் வைரம்போன்ற கண்களும் கொண்ட குழந்தை அது. நாற்பத்தொருநாள் அவள் அக்குழந்தையுடன் அந்தத் தீவிலேயே இருந்தாள். பிறகு அதன் கழுத்தில் அந்தக் கங்கணத்தை அணிவித்து படகிலேறி மச்சபுரிக்கு வந்தாள். அக்குழந்தையை தன் தந்தை சத்யவானிடம் ஒப்படைத்தாள். கருநிறம் கொண்டிருந்ததால் அதை அவர்கள் கிருஷ்ணன் என்றழைத்தனர். தீவில் பிறந்தவனாதலால் துவைபாயனன் என்றனர்.
பீஷ்மர் அந்தக்கதையை ஓரளவு முன்னரே அறிந்திருந்தார். கைகளைக்கூப்பி கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் வாழ்ந்த வடதிசை நோக்கித் தொழுதார். மீனவக்குடிலில் வளர்ந்த மகாவியாசனுக்கு குருதியிலேயே வேதங்கள் இருந்தன. தன் ஏழுவயதில் கிளம்பி பராசரமுனிவரிடம் சென்று சேர்ந்து முதல்மாணவனாக ஆகி கற்கவேண்டியவை அனைத்தையும் கற்றார். தன் இருபத்தைந்தாவது வயதில் வேதங்களை கிருஷ்ண சுக்லசாகைகளுடனும் வேதாங்கங்களுடனும் இணைத்துத் தொகுத்து மகாவியாசனென்று அறியப்படலானார்.

Tuesday, 8 November 2011

என்னைப் பற்றி

தனிமை. இதை எவ்வளவு வெறுத்தேனோ, அவ்வளவு விரும்ப ஆரம்பித்து விட்டேன். இவ்வலைப்பூ என் ஜன்னல். இது வழியேயான என் பார்வைகள் மகாபாரதம் பற்றியது. ஆங்கிலத்திலும் தமிழிலும்.